ஹூப்ளி கல்லூரி மாணவி நேஹா, மாணவர் பாகல் ஃபயாஸால் குத்திக்கொலை செய்யப்பட்டார். அவர் நேஹாவின் கழுத்தில் 9 முறை கத்தியால் குத்தியதாக கூறப்பட்டது. ஆனால், ஃபயாஸ், நேஹாவின் கழுத்தில் 14 முறை கத்தியால் குத்தியதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
கர்நாடகா மாநிலம், ஹூப்ளி மாநகராட்சி உறுப்பினர் நிரஞ்சன் ஹிரேமாதாவின் மகள் நேஹா. கல்லூரி மாணவியான இவர் பிவிபி கல்லூரியில் படித்து வந்தார். அவருடன் படித்து வந்த மாணவர் பாகல் ஃபயாஸ், நேஹாவுடன் நட்புடன் பழகியுள்ளார். இந்த நிலையில், நேஹாவை அவர் ஒருதலையாக காதலிக்கத் துவங்கியுள்ளார். தான் காதலிப்பதை நேஹாவிடம் ஃபயாஸ் கூறியுள்ளார். ஆனால், அவரது காதலை நேஹா ஏற்கவில்லை. இதனால் ஃபயாஸிடமிருந்து அவர் விலக ஆரம்பித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ஃபயாஸ், ஏப்ரல் 18-ம் தேதி கல்லூரி உணவகத்தில் இருந்த நேஹாவின் கழுத்தில் கத்தியால் மாறி மாறிக் குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த நேஹாவை, கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேஹா உயிரிழந்தார்.
இந்த தகவல் அறிந்த போலீஸார், ஃபயாஸை கைது செய்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து எதிர்கட்சியினர் சார்பில் கர்நாடகா முழுவதும் தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார், ஆனால், இப்பிரச்சினையை அரசியலுக்காக எதிர்கட்சிகள் பயன்படுத்துவதாக கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், தன்னைக் காதலிக்கவில்லை என்று கூறிய ஆத்திரத்தில் நேஹாவின் கழுத்தில் கத்தியால் 9 முறை ஃபயாஸ் குத்தினார் என்று சம்பவத்தைப் பார்த்த மாணவ, மாணவியர் கூறினர். இந்த நிலையில், நேஹாவின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
இதில் நேஹாவை பாகல் ஃபயாஸ் கத்தியால் குத்தியது 9 முறை அல்ல, 14 முறை கத்தியால் குத்தியுள்ளார். கழுத்து அருகே கத்தியால் குத்தியதால் ரத்த நாளம் அறுந்து பலத்த ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேஹா உயிரிழந்தார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட இளைஞர் மீது திடீர் தாக்குதல்... கர்நாடகாவில் அடுத்த சம்பவம்!
அரசுப்பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து... ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்!