நள்ளிரவில் ஏடிஎம் மெஷினை உடைக்க முயன்ற மர்ம நபர்... சுற்றி வளைத்தது போலீஸ்!


ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

செங்குன்றம் அருகே தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை செங்குன்றம் காமராஜர் நகர் ஜிஎஸ்டி புறவழிச்சாலையில் பழைய சார் பதிவாளர் அலுவலகம் அருகே எச்.டி.எஃப்.சி. வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு இங்குள்ள ஏடிஎம் மையத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் நீண்ட நேரமாக ஏடிஎம் மையத்திற்குள் நின்று கொண்டிருந்தார். இதைப் பார்த்துவிட்டு பாதுகாவலர் சந்தேகம் அடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் அங்குள்ள சிசிடிவி கேமராவில் கண்காணித்தபோது, அந்த மர்ம நபர் ஏடிஎம் இயந்திரத்தை கல்லைக் கொண்டு உடைக்க முயற்த்தது தெரியவந்தது.

செங்குன்றம் அருகே இயங்கி வரும் எச்.டி.எஃப்.சி., வங்கி கிளை

உடனடியாக இது தொடர்பாக அவர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், தப்பிச்செல்ல முயன்ற அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் செங்குன்றம் அடுத்த வடகரையைச் சேர்ந்த அலெக்சாண்டர் (40) என்பது தெரியவந்தது.

கொள்ளையில் ஈடுபட முயன்ற அலெக்ஸாண்டர் என்பவர் கைது

அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, வங்கி அதிகாரிகள் அந்த ஏடிஎம் மெஷினை ஆய்வு செய்தபோது, அதிலிருந்த பணப்பெட்டியை உடைக்க முடியாததால் பணம் தப்பியது தெரியவந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட இளைஞர் மீது திடீர் தாக்குதல்... கர்நாடகாவில் அடுத்த சம்பவம்!

x