பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சரணடைவதில் இருந்து விலக்களிக்க கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு விழுப்புரம் அருகே முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிப்பதற்காக வந்த பெண் எஸ்பி-க்கு முன்னாள் சிறப்பு டிஜிபி-யான ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு, ஜூன் மாதம் ராஜஷ் தாஸுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை மாவட்ட அமர்வு நீதிமன்றம் விசாரித்து தண்டனையை உறுதி செய்தது.
இதையடுத்து அவரை கைது செய்வதற்காக சிபிசிஐடி போலீஸார் சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போது அவர் அங்கிருந்து தலைமுறைவானார். அவர் ஒடிசாவில் பதுங்கி இருக்கலாம் என அறிந்த போலீஸார் அங்கும் விரைந்தனர். அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் சிபிசிஐடி போலீஸாரால் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஸ் தாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பல ஆண்டுகளாக காவல்துறையில் உயர் அதிகாரி பொறுப்பில் இருந்த நான் சிறைசென்றால், அது தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்’ என தெரிவித்திருந்தார் தாஸ்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ராஜேஷ் தாஸின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உடனடியாக அவர் போலீஸார் முன்பு சரணடைய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.