புதுக்கோட்டையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் சாலையோரத்தில் டீ குடித்து கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் உட்பட 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, திருவள்ளூரில் இருந்து ஓம்சக்தி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வேனில் வந்துள்ளனர். அதேபோல், சென்னை திருவள்ளூர் பகுதியில் இருந்து மற்றொரு வேனில் ஐயப்ப பக்தர்கள் வேனில் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களது வாகனத்தை புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரத்தில் நிறுத்திவிட்டு டீ குடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அரியலூரில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி வந்துள்ளது. இந்த லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தியிருந்த வாகனங்கள் மீது அசுர வேகத்துடன் மோதியது. இதில் டீ குடித்துக் கொண்டு இருந்த பக்தர்கள் அலறி அடித்து ஓடினார். இந்த கோர விபத்தில் ஐயப்ப பக்தர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் சிறுமி உட்பட 19 பேர் காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீஸார், மீட்பு பணிகளை மேற்கொண்டதோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகாலையில் நடைபெற்ற இந்த கோர விபத்து அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.