நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து இறந்த மூதாட்டி... சொத்து வழக்கு தோற்றதால் விபரீத முடிவு!


உயிரிழந்த கோவிந்தம்மாள்

சொத்துப் பிரச்சினை தொடர்பான வழக்கில் தோல்வி அடைந்ததால், விரக்தி அடைந்த மூதாட்டி தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த தெக்கலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகள் கோவிந்தம்மாள் (60). தனது சகோதரர்கள்கான பாலசுப்பிரமணி, ஈஸ்வரமூர்த்தி ஆகியோருடன் கோவிந்தம்மாளுக்கு சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பான வழக்கு தாராபுரம் உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின் போது இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் கோவிந்தம்மாள் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சடலமாக கோவிந்தம்மாள்

இந்த நிலையில், இன்று கோவிந்தம்மாள் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்தார். அங்குள்ள விநாயகர் கோயில் முன்பு சிறிது நேரம் அமர்ந்திருந்த அவர், திடீரென தனது பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் அலறித் துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்க முயற்சித்த போதும், தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், கோவிந்தம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவிந்தம்மாளின் உடலை மீட்டு போலீஸார் விசாரணை

கோவிந்தம்மாள் கொண்டு வந்திருந்த உடைமைகளை சோதனை செய்தபோது அதில் விஷப்பாட்டில் ஒன்று காலியாக இருந்தது தெரியவந்தது. எனவே, அவர் விஷத்தை அருந்திவிட்டு, பின்னர் தீக்குளித்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்த கோவிந்தம்மாள் மீது ஏற்கெனவே தன் தாயை கட்டையால் தாக்கியது தொடர்பாக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அது நிலுவையில் உள்ளது.

இதனிடையே வழக்கு தனக்கு சாதகமாக வராததால் விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். மூதாட்டி ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து இறந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x