மண்வெட்டியால் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்... குடும்பம் நடத்த வரமறுத்ததால் ஆத்திரம்!


லட்சுமி, செல்வம்

வாழ மறுத்த மனைவியை மண்வெட்டியை கொண்டு அடித்து கொடூரமான முறையில் அவரது குடிகார கணவன் கொலை செய்த சம்பவம் முதுகுளத்தூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த திருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வம், லட்சுமி தம்பதி. இவர்களுக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் தனிக் குடித்தனம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் செல்வம் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாகவும், நாள்தோறும் மது சாப்பிட்டுவிட்டு வந்து லட்சுமியை அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இந்த சூழ்நிலையில் செல்வம் தன்னுடைய மனைவி லட்சுமியை சமாதானம் செய்து, தன்னுடன் வந்து குடித்தனம் நடத்துமாறு கெஞ்சி கேட்டுள்ளார். ஆனாலும் லட்சுமி இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கொலை

இதனால், விரக்தி அடைந்த செல்வம், தன்னுடன் வாழ மறுக்கும் மனைவி லட்சுமியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். நேற்று கூலி வேலைக்கு சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டு இருந்த லட்சுமியை, இருசக்கர வாகனத்தால் இடித்து கீழே தள்ளினார். அதன் பிறகு மண்வெட்டியை எடுத்து கொடூரமாக அடித்து, கொலை செய்துள்ளார்.

இதன் பிறகு அவர் மண்வெட்டியோடு முதுகுளத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று, அங்கே, தன்னுடைய மனைவியை கொலை செய்து விட்டதாக தெரிவித்து சரணடைந்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x