வீட்டில் தூங்கி கொண்டிருந்தவரை எழுப்பி வெட்டிக்கொலை செய்த கும்பல், தடுக்க வந்த அவரது தாயையும் வெட்டி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் திருவேற்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவேற்காடு சுந்தர சோழபுரம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஜயகாந்த் (20). பிளம்பிங் வேலை பார்த்து வந்த இவர், தனது தாய் சத்யாவுடன் வசித்து வந்தார். நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த விஜயகாந்த் இரவு உணவு அருந்தி விட்டு தன் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு ஒன்றரை மணி அளவில் ஒரு கும்பல், விஜயகாந்த் வீட்டுக் கதவை தட்டியது. இதைக்கேட்டு விஜயகாந்தின் தாய் சத்யா எழுந்து வந்து கதவைத் திறந்தார். அப்போது அந்த கும்பல் அவரை தள்ளிவிட்டு உள்ளே சென்று தூங்கிக் கொண்டிருந்த விஜயகாந்தை சரமாரி வெட்டிக் கொலை செய்தது. இதைத் தடுக்க வந்த அவரது தாய் சத்யாவையும் கையில் வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது.
இதனைப் பார்த்து அதிர்ந்து போன சத்யா கதறியழுத சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கொலையாளிகளைப் பிடிக்க முயன்றார். ஆனால், அவர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பிச் சென்றனர். இதுகுறித்து திருவேற்காடு காவல் நிலையத்திற்கு சத்யா தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீஸார், விஜயகாந்த் உடலை மீட்டு கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலை சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி( 23) என்பவருக்கும், விஜயகாந்த்க்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது தெரிய வந்தது. அப்போது விஜயகாந்த் தனது நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து ஆரோக்கியசாமியை வெட்டியதால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் விஜயகாந்தை பழிதீர்க்க எண்ணிய ஆரோக்கியசாமி, நேற்று நள்ளிரவு தனது கூட்டாளிகளான சரவணன், விக்னேஷ் ஆகியோருடன் சென்று வீடு புகுந்து விஜயகாந்தை வெட்டிக் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து போலீஸார் தலைமறைவான ஆரோக்கியசாமி, சரவணன், விக்னேஷ், ஆகிய மூன்று பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். வீடு புகுந்து தூங்கி கொண்டிருந்தவரை தாய் கண் முன்னே வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
லாலுவின் 2 மகள்களுக்கு வாய்ப்பு... பீகாரில் 22 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது ஆர்ஜேடி!
சத்தீஸ்கரில் 50 அடி பள்ளத்திற்குள் பேருந்து கவிழ்ந்து 12 தொழிலாளர்கள் பலி... பிரதமர் மோடி இரங்கல்!