புதிதாக மின் இணைப்பு வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கையும், களவுமாக கைது செய்துள்ளனர்.
சென்னை துரைப்பாக்கம் பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் தனியார் கால் டாக்சி நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அடையாறு தாமோதரபுரம் பகுதியில் சொந்தமாக 850 சதுர அடி நிலம் உள்ளது.
இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு அந்த இடத்தில் கிருஷ்ணகுமார் வாடகை விடுவதற்காக 6 குடியிருப்புகளைக் கட்டியுள்ளார். பின்னர் ஒரு வீட்டிற்கு புதிதாக மின் இணைப்பு பெறவேண்டி கடந்த செப்டம்பர் 14-ம் தேதி அடையாறு பெசன்ட் நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார்.
அங்கு பணியில் இருந்த இளநிலை பொறியாளர் பாலசுப்பிரமணியம் என்பவரைச் சந்தித்து மின் இணைப்பு பெறுவது குறித்து கிருஷ்ணகுமார் கேட்டுள்ளார். அப்போது பாலசுப்ரமணியம் மின் இணைப்பு பெறுவதற்கு மின்வாரியத்திற்கு டெபாசிட் கட்டணம் செலுத்த வேண்டும், அதுபோக நிறைய செலவுகள் உள்ளது.எனவே 40 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு கிருஷ்ணகுமார், என்னால் அவ்வளவு தர முடியாது என கூறியதைக் கேட்டு ஆத்திரமடைந்த இளநிலை பொறியாளர் பாலசுப்ரமணியம், நான் கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால் மின் இணைப்பு வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணகுமார் மறுநாள் பாலசுப்ரமணியத்தைச் சந்தித்து, என்னால் நாற்பதாயிரம் தர இயலாது, பத்தாயிரம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டு மனு அளித்தார். 16-ம் தேதி அவரது மனு பதிவு செய்யப்பட்டதை அடுத்து கிருஷ்ணகுமார் மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டிய 33 ஆயிரம் ரூபாயை செலுத்தினார்.
பின்னர் இளநிலை பொறியாளர் பாலசுப்பிரமணியத்தைச் சந்தித்து மின் இணைப்பு குறித்து கேட்டபோது, அவர் பணம் கொடுத்தால் தான் மின்இணைப்பு தரமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.
அதிகாரிக்கு பணம் கொடுக்க மனம் இல்லாத கிருஷ்ணகுமார் கடந்த 19-ம் தேதி இதுகுறித்து லஞ்ச ஒழிப்புதுறை அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தினர். அத்துடன் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கிருஷ்ணகுமாரிடம் கொடுத்து இளநிலை பொறியாளர் பாலசுப்ரமணியம் கொடுக்கும் படி அறிவுறுத்தினர்.
அதன் பேரில் கிருஷ்ணகுமார், பெசன்ட் நகர் மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்த இளநிலை பொறியாளர் பாலசுப்பிரமணியத்திடம் 10,000 ரூபாயை லஞ்சமாக கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸார் பாலசுப்ரமணியத்தை கையும், களவுமாக கைதுசெய்தனர். பின்னர் பாலசுப்ரமணியம் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.