செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் போலீஸ் என்கவுண்டரில் இருவர் கொல்லப்பட்டது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி காரணை புதுச்சேரி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி வாகன சோதனையின் போது போலீஸாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய வினோத் என்ற சோட்டா வினோத் மற்றும் ரமேஷ் என்ற இரண்டு ரவுடிகள் காவல்துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டர் குறித்து சிபிசிஐடி விசாரிக்க கோரி சோட்டா வினோத்தின் தாயார் ராணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், சம்பவத்தன்று வினோத் மற்றும் அவரது நண்பர் ரமேஷ் இருவரும் சிறுசேரியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீஸார் இருவரையும் ஹோட்டலில் இருந்து அழைத்து சென்று என்கவுண்டரில் கொன்றதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இது ஒரு போலி என்கவுண்டர் எனவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். எனவே இது குறித்து செங்கல்பட்டு மாஜிஸ்திரேட் விசாரணை மற்றும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் என்கவுண்டர், லாக் அப் மரணம் உள்ளிட்டவை குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த என்கவுண்டர் சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றிய நீதிபதி, டி. எஸ்.பி அந்தஸ்து அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.