விமான நிலையத்தில் ஒரே நாளில் 13 கிலோ தங்கம் சிக்கியது; 43 ஊழியர்கள் இடமாற்றம்!


சென்னை விமான நிலையம்

வெளிநாட்டில் இருந்து ஒரே விமானத்தில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கடத்தல் தங்கம், ஐபோன், லேப்டாப் உள்ளிட்டவை சிக்கியது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் பணியாற்றிவந்த 43 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தங்கம் (மாதிரி படம்)

ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 14ம் தேதி சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. இந்த விமானத்தில் பயணிகள் தங்கம், ஐபோன், லேப்டாப், வெளிநாட்டு சிகரெட் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததால், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். விமானத்தில் வந்த 186 பயணிகளையும் நிறுத்தி பல மணி நேரமாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடத்தலில் தொடர்பு இல்லாத 73 பேரை வெளியே செல்ல அனுமதித்தனர்.

நள்ளிரவு வரை நடந்த சோதனையில் பயணிகள் உள்ளாடைகளுக்குள் தங்கப் பசைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிலர் சூட்கேஸ் லைனிங் உள்ளே தங்கத்தை ஸ்ப்ரிங் கம்பிகளாக மாற்றி மறைத்து வைத்திருந்தனர். சூட்கேஸ் மற்றும் பைகளில் ரகசியஅறைகள் வைத்து 120 ஐபோன்,84 ஆண்ட்ராய்டு போன், வெளிநாட்டு சிகரெட்கள், பதப்படுத்தப்பட்ட குங்குமப்பூக்கள், லேப்டாப்புகள் உள்ளிட்ட பொருட்களும் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

மொத்தம் ரூ.14 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்கக்கட்டிகள், 3 கிலோ தங்க பசைகள் உட்பட அனைத்து பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 113பயணிகள் மீதும் சுங்க சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 113பேரையும் அதிகாரிகள் ஜாமீனில் விடுவித்தனர். இந்த கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பணியாற்றிய சுங்கத்துறையை சேர்ந்த 20 பேர் மற்றும் கார்கோ அஞ்சலக பிரிவில் பணியாற்றிய 23 பேர் என மொத்தம் 43 ஊழியர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 43 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது விமான நிலைய பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x