ராமநாதபுரத்தில் ரூ.4,000 லஞ்சம் வாங்கிய வட்டாட்சியரின் ஓட்டுநர், வருவாய் ஆய்வாளர் கைது


ரெபெக்கால், சத்தியநாதன்

ராமநாதபுரம்: கடலாடி அருகே கண்மாயில் மண் எடுக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியரின் ஓட்டுநர் மற்றும் பெண் வருவாய் ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (35). இவர் தனது தந்தையின் பெயரில் ஆப்பனூர் பெரிய கண்மாயிலிருந்து வண்டல் மண் எடுத்துச் செல்வதற்கு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பம் செய்தார். பின்னர், ஆப்பனூர் பிர்காவை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் ரெபெக்கால் (40) என்பவரை சந்தித்து விவரம் கேட்டுள்ளார். அப்போது, வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியரின் ஜீப் ஓட்டுநர் சத்தியநாதன் (45) ஆகிய இருவரும், கண்மாயில் மண் எடுப்பதற்கான அனுமதி ஆணை வாங்கி தருவதற்கு தங்களுக்கும், வட்டாட்சியருக்கும் சேர்த்து ரூ.4 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டுமென கேட்டுள்ளனர்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமச்சந்திரன், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸில் புகார் அளித்தார். பின்னர், லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் ஏற்பாட்டின் பேரில் நேற்று முன்தினம் மாலை ராமச்சந்திரன் ரசாயனம் தடவப்பட்ட பணம் ரூ.4 ஆயிரத்தை ஜீப் ஓட்டுநர் சத்தியநாதனிடம் கொடுத்தார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் சத்தியநாதனை கைது செய்ய முயன்றனர். ஆனால், அந்தப் பணத்துடன் அவர் தப்பி ஓடிவிட்டார். எனினும், அவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று அதிகாலை 3 மணியளவில் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, வருவாய் ஆய்வாளர் ரெபெக்காலையும் கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

x