கல்வீசி தாக்கியதில் 3 போலீஸார் படுகாயம்... 8 பெண்கள் உள்பட 11 பேர் கைது!


போலீஸார் மீது கல்வீச்சு (கோப்பு படம்)

உத்தரப் பிரதேச மாநிலத்தில் புகார் குறித்து விசாரிக்க சென்ற போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக 8 பெண்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

உத்தரப் பிரதேசத்தில் போலீஸார் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூர் அருகே அல்ஹாத்பூர் கிராமத்தில் நிலத்தகராறு தொடர்பான புகார் குறித்து விசாரிக்க, நிகோகி காவல் நிலைய போலீஸார், நேற்று அந்த கிராமத்துக்கு சென்றனர். அப்போது போலீஸார் மீது திடீரென ஒரு கும்பல் கற்களை வீசி தாக்கியது. இதில் 3 போலீஸார் படுகாயமடைந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (நகரம்) சஞ்சய் குமார் இன்று கூறுகையில், "நிலத் தகராறு வழக்கு ஒன்றில் புகார்தாரருக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அந்த நபர் வருவாய்த் துறை பணியாளர்களின் மேற்பார்வையில் சர்ச்சைக்குரிய நிலத்தில் சில கற்களை வைத்திருந்தார். அதில் 3 கற்களை எதிர் தரப்பினர் அகற்றினர்.

கைது

இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விசாரிக்க போலீஸார் அங்கு சென்றனர். அப்போது, புகார்தாரருக்கு எதிரானவர்கள் திடீரென போலீஸாரை நோக்கி கற்களை வீசி தாக்கினர். இதில் 3 போலீஸார் படுகாயமடைந்தனர். மேலும், போலீஸ் வாகனங்களும் சேதமடைந்தன. தாக்குதலில் காயமடைந்த போலீஸார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.” என்று கூறினார்

இந்நிலையில் போலீஸாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிந்து 11 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களில் 8 பேர் பெண்கள் ஆவர். இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x