தனது 4 மகனைக் கொன்று சூட்கேஸில் அடைத்த ஏ-1 ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பெண் மீது 642 பக்க குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் சுசனா சேத்(39). ஏ-1 ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இவர், தனது 4 வயது மகனுடன் ஜனவரி 6 அன்று கோவா சென்று ஓட்டலில் அறையெடுத்து தங்கினார். ஜனவரி 8 அன்று காலை அறையை காலி செய்தார். ஓட்டல் நிர்வாகத்தினர் உதவியோடு பெங்களூருக்கு வாடகை கார் ஏற்பாடு செய்தார்.
காரில் 12 மணி நேரப் பயணம் என்பதால், ஒன்றரை மணி நேரமே ஆகும் என்பதால் விமானப் பயணத்தை ஓட்டல் நிர்வாகத்தினர் பரிந்துரை செய்தபோது அதனை சுசனா மறுத்துள்ளார். அவர் கிளம்பியதும் அறையைச் சுத்தம் செய்த பணியாளர்கள், அங்கு ரத்தக்கறையை கண்டதும் போலீஸாருக்குத் தகவல் தந்தனர். சுசனா சேத் பயணித்த வாடகைக்கார் ஓட்டுநரை செல்போனில் தொடர்புகொண்ட போலீஸார், சுசனா சந்தேகிக்காத வகையில் கொங்கணி மொழியில் விசாரித்தனர். பின்னர் வழியில் தென்படும் காவல் நிலையத்தில் சுசனாவை ஒப்படைக்குமாறு கார் டிரைவருக்கு உத்தரவிட்டனர்.
அந்த வகையில் கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஐமங்கலா காவல் நிலையத்தில் காரை டிரைவர் செலுத்தினார். அங்கிருந்த போலீஸார் சுசனா சேத்தை வளைத்ததோடு, அவர் வசமிருந்த கனத்த சூட்கேஸையும் கைப்பற்றினர். அதனைத் திறந்து பார்த்தபோது சுசனாவின் 4 வயது மகன் சடலம் இருந்தது. ஓட்டலில் 4 வயது மகனைக் கொலை செய்து சூட்கேஸில் அடைத்து சுசனா சேத் எடுத்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக கலங்குட் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், கோவா குழந்தைகள் நீதிமன்றத்தில் சுசனா சேத்துக்கு எதிராக 642 பக்க குற்றப்பத்திரிகையை கலங்குட் போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். அதில், கழுத்தை நெரித்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக குழந்தை இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையின்படி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 302 (கொலை) மற்றும் 201 (அலுவலகச் சான்றுகள் காணாமல் போனது) மற்றும் கோவா குழந்தைகள் சட்டம் பிரிவு 8 ஆகியவற்றின் கீழ் சேத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவா காவல்துறை இந்த வழக்கில் 59 சாட்சிகளைப் பெயரிட்டுள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவரின் கணவரின் வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளது, அவர் பெங்களூருவில் உள்ள ஒரு குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, சேத் தனது மகனைச் சந்திக்க அனுமதிக்கவில்லை என்று கூறினார்.
கோவா குழந்தைகள் நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 14, 2024 அன்று விசாரிக்கும். அப்போது சுசனா சேத்துக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். குற்றம் சாட்டப்பட்டவர் ஐலைனரைப் பயன்படுத்தி டிஷ்யூ பேப்பரில் எழுதப்பட்ட ஒரு குறிப்பையும் குற்றப்பத்திரிகையுடன் போலீஸார் இணைத்துள்ளனர். அதில், சுசனா சேத்தின் கையெழுத்து என அடையாளம் காட்டிய நிபுணர்களின் உறுதிப்படுத்தலையும் இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!