சென்னையில் பழைய இரும்புக் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக குடியிருப்பு பகுதிகளை கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவியது.
சென்னையில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். கடும் வெயில் காரணமாக அவ்வப்போது சிறிய அளவிலான தீ விபத்துகளும் நடந்து வருகிறது.
பள்ளிக்கரணை 200 அடி ரேடியல் சாலை அருகில் உள்ள ராம்நகர் நான்காவது விரிவு பகுதியில் வைஷ்ணவி பழைய இரும்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. கண்ணன் என்பவருக்கு சொந்தமான இந்தக் கிடங்கில், பிளாஸ்டிக் பொருட்கள், இரும்புப் பொருட்கள் மற்றும் பயனற்ற பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று மதியம் பணியாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென குடோனில் தீ பற்றி எரியத் துவங்கியது. கடையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட பழைய பொருட்கள் தீப்பற்றி மளமளவென எரிந்ததால் கடுமையான கரும்புகை எழுந்தது. இந்தக் கரும்புகை அருகிலுள்ள வீடுகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர். சிலருக்கு மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்பட்டது.
இதுகுறித்து வேளச்சேரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனம் மற்றும் தண்ணீர் லாரியுடன் வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்து காரணமாக கடையில் உள்ள பொருட்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறுவதால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது. இதனால் தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதியின் அருகே பொதுமக்கள் செல்லாதவாறு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!
முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!
‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்
காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?