2,000 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீரிடம் டெல்லி போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2,000 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கை சில நாட்களுக்கு முன்பு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தி சம்பாதித்த பணத்தை கட்டுமான நிறுவனம், சினிமா தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி ஜாபர் சாதிக் தயாரிக்கும் இறைவன் மிகப் பெரியவன் என்கிற திரைப்படத்திற்காக இயக்குநர் அமீருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசி அதற்கான முன்பணமாக 28 லட்சம் ரூபாயை ஜாபர் சாதிக்கிடமிருந்து அமீர் பெற்றுள்ளார்.. இந்த படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்த நிலையில் தற்போது மீதமுள்ள படம் எடுக்க முடியாமல் நிலுவையில் உள்ளது.
மேலும் கடந்த 2014 முதல் ஜாபர் சாதிக்கும் இயக்குநர் அமீரும் நண்பர்களாக பழகி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து லீ கேப் என்கிற உணவகத்தை நடத்தி வருவது விசாரணையில் தெரியவந்தது.
ஆனால், இயக்குநர் அமீர் தனக்கும், ஜாபர் சாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், திரைப்பட இயக்குநர் அமீர் உட்பட மூன்று நபர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். அதன் அடிப்படையில் தற்போது டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் இயக்குநர் அமீர், தனது வழக்கறிஞர் பிராபகருடன் நேரில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.
அவரிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஜாபர் சாதிக் உடனான நட்பு மற்றும் அவருடன் சேர்ந்து தொழில் செய்து வருவது குறித்தும், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?
உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!