கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர்; 3 மணி நேர போராட்டத்தில் உயிருடன் மீட்பு


பள்ளத்தில் விழுந்த இளைஞரை மீட்கும் பணி

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் டால்பின் நோஸ் பகுதியில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞரை 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கொடைக்கானல் டால்பின் நோஸ் பகுதி

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் விடுமுறை நாள்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் வார இறுதி விடுமுறையையொட்டி, தூத்துக்குடியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் பல்வேறு இடங்களைப் பார்த்துவிட்டு இன்று டால்பின் நோஸ் பகுதியை பார்வையிட வந்தனர். அங்கு அந்த இளைஞர்கள் புகைப்படம் எடுக்க முயன்றபோது, அவர்களில் தன்ராஜ் என்ற இளைஞர் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டார்.

டால்பின் நோஸ் பகுதியில் விழுந்த இளைஞரை மீட்கும் பணி

இதையடுத்து அவருடன் வந்த இளைஞர்கள் அவரை மீட்க முயன்றனர். பின்னர் இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தன்ராஜை உயிருடன் மீட்டனர். கீழே விழுந்ததில் அவருக்கு கை, கால்கள் மற்றும் தலையில் சிறு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவருக்கு முதலுதவி அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளைஞர் பள்ளத்தில் தவறி விழுந்த சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான பகுதிக்கு செல்லாமல் கவனமாக சுற்றி பார்க்குமாறு வனத்துறையினரும், மாவட்ட நிர்வாகத்தினரும் அறிவுறுத்தியுள்ளனர்.

x