ஓசூரில் தேர்தல் சிறப்பு தணிக்கை நடவடிக்கையின்போது ரூ.10 லட்சத்துடன் பிடிபட்ட தொழிலதிபர் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் பரிசு வழங்கப்படுவதை தவிர்க்கும் நோக்கில் தேர்தல் கண்காணிப்பு அலுவலகர்கள் மற்றும் போலீஸார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக எடுத்துச்செல்வோரிடம், அது தொடர்பான உரிய ஆவணங்கள் இருப்பின் அதிகாரிகள் அவர்களை விடுவித்து விடுகின்றனர்.
ஆனால் உரிய ஆவணம் இல்லாதவர்களிடம் அந்த தொகையை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். பணத்துக்கு உரியோர் பின்னர் உரிய ஆவணங்கள் சமர்பித்து அந்த தொகையை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் தொகை ரூ10 லட்சம் அல்லது அதற்கு மேலாக இருப்பின், தேர்தல் அதிகாரிகள் அது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அறிவிப்பார்கள். இந்த வகையில் ஓசூரைச் சேர்ந்த லோகேஷ் குமார் என்பவர் வருமான வரித்துறையினர் அதிரடியில் சிக்கியிருக்கிறார்.
கிருஷ்ணகிரி மாவடம் ஓசூர் ஜலகண்டேஸ்வரர் நகரை சேர்ந்த லோகேஷ் குமார் சொந்தமாக கிரஷர் வைத்து நடத்தி வருகிறார். மார்ச் 28 அன்று பெங்களூர் சென்று திரும்பும்போது, ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் சிக்கினார். லோகேஷ் குமார் காரில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ10 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாததோடு, அது குறித்தான அதிகாரிகளின் கேள்விக்கு லோகேஷிடம் பதிலும் இல்லை. எனவே வருமான வரித்துறையிடம் தேர்தல் அதிகாரிகள் தகவல் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்தே ஜலகண்டேஸ்வரர் நகரில் அமைந்திருக்கும் லோகேஷ் குமாரின் வீட்டில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். வருமான வரித்துறை இணை இயக்குநர் விஷ்ணு பிரசாத் என்பவர் தலைமையிலான 6 அதிகாரிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவருடன் லோகேஷ் குமார் தொடர்பில் உள்ளதால், தேர்தல் நடத்தை விதிமீறல் பின்னணி ஏதும் உள்ளதா என்பது குறித்து தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.