கோவை அருகே, பூண்டி வெள்ளியங்கிரி மலையேறியவர்களில் மேலும் ஒரு பக்தர் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கிறார். இதன் காரணமாக ஒரே மாதத்தில் மலையேறி இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டம், பூண்டி மேற்குத் தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. இங்கு, 7 மலைகளை கடந்து சென்று வெள்ளியங்கிரி ஆண்டவரை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். வெள்ளியங்கிரி மலையில் சுவாமி தரிசனம் செய்ய தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
வெள்ளியங்கிரி மலை ஏறுவது மிகவும் கடினமானது என்பதால், வயதானவர்கள், உடல்நலக்குறைவு உடையவர்கள் மலையேற வேண்டாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மலையேற தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மற்றும் 25ம் தேதிகளில் மலையேறிய பக்தர்கள் 3 பேர் அடுத்தடுத்து உடல்நலக் குறைவால் உயிரிழந்தனர்.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த ரகுராம் (50) என்ற பக்தர் நேற்று, 5வது மலையில் ஏறிக்கொண்டிருந்தபோது மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் வெள்ளியங்கிரி மலையில் கடந்த ஒரு மாதத்தில் மலையேறி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து பக்தர்கள் உயிரிழப்பதால், அரசு அறிவுறுத்தியபடி, வயதானவர்கள், மூச்சுதிணறல், இதய கோளாறு உள்ளவர்கள் மலையேற வேண்டாம் என மீண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.