உளுந்தூர்பேட்டை அருகே மரத்தில் வேன் மோதியதில் 7 பேர் உயிரிழப்பு


உளுந்தூர்பேட்டை அருகே மரத்தில் மோதி விபத்துக்குள்ளான வேன்.

விழுப்புரம்/ஓசூர்: உளுந்தூர்பேட்டை அருகே மரத்தில் வேன் மோதியதில் 7 பேர்உயிரிழந்தனர். மேலும், 16 பேர் பலத்த காயமடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகேயுள்ள மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (50). இவருடன், மாம்பாக்கம், மேலப்பழுந்தை, லாடாவரம், குந்தனூர், கூராம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 22 பேர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குப் புறப்பட்டனர். வேனை மாம்பாக்கம் வசந்தகுமார்(36) ஓட்டினார். நேற்று முன்தினம் காலை திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றனர். பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்குப் புறப்பட்டனர்.

திருச்சி, பெரம்பலூர் வழியாக வந்த இவர்களது வேன், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் சிறுத்தனூர் ஜெயசூரியா நகர் பகுதியில் நேற்று அதிகாலை வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம்உள்ள மரத்தின் மீது மோதியது. இதில் வேனில் பயணம் செய்த மாம்பாக்கம் முருகன் (47), சக்தி (15), குட்டி என்ற செல்வம்(50), துரை(43), ராமலிங்கம் (50) மற்றும் கூராம்பாடியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் ரவி (60) ஆகியோர் அந்த இடத்திலேயேஉயிரிழந்தனர். மேலும் வேன் ஓட்டுநர் வசந்தகுமார் உட்பட 17 பேர் பலத்த காயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், காயமடைந்தவர்களை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், உயிரிழந்த 6 பேரின்சடலங்கள், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதற்கிடையில், விபத்தில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் மனைவி தனம் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: உளுந்தூர்பேட்டை அருகே நேரிட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்தினருக்கு தலாரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

அஞ்செட்டி அருகே... கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையிலிருந்து அஞ்செட்டி செல்லும் மலைப் பாதையில் நேற்று பிற்பகல் ஹாலோபிளாக் கற்கள் ஏற்றிய சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. குந்துக்கோட்டை அருகே திருமுறுக்கு வளைவுப் பகுதியில் திரும்பியபோது, எதிர்பாராத விதமாகஎதிரே வந்த இருசக்கர வாகனம் மீது, சரக்கு வாகனம் கவிழ்ந்தது.

அதேநேரத்தில் பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம், சரக்கு வாகனத்தின் பின்பகுதியில் மோதியது. இந்த விபத்தில், எதிரே இருசக்கர வாகனத்தில் வந்ததக்கட்டி மாதேஷ் (32), அவரது மனைவி ஜெயலட்சுமி (26), சரக்குவாகனத்தின் மீது அமர்ந்து வந்தவடமாநிலத் தொழிலாளி கோவிந்தன் (20) ஆகியோர் சரக்கு வாகனத்தின் அடியில் சிக்கி உயிர்இழந்தனர்.

மேலும், சரக்கு வாகன ஓட்டுநர் சுஜித் மற்றும் வாகனத்தின் பின்னால் மோதிய இருசக்கர வாகனத்தில் வந்த பத்திகவுண்டனூர் சக்தி (27)ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து வந்த அஞ்செட்டிபோலீஸார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

x