ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 11 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர்.
குஜராத்தின் பாவ்நகரில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவுக்கு இன்று அதிகாலை 40 பயணிகளுடன் பேருந்து சென்றது. இந்த பேருந்து பரத்பூர் மாவட்டத்தில் உள்ள ஹன்ட்ரா மேம்பாலத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நிறுத்தப்பட்டது.
அப்போது வேகமாக வந்த கண்டெய்னர் லாரி பேருந்தின் பின்னால் மோதியது. இதில் ஐந்து ஆண்கள் மற்றும் 6 பெண்கள் உட்பட 11 பேருந்து பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த பாரத்பூர் போலீஸார் விரைந்து வந்து காயமடைந்த 15 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் இறந்தவர்கள் குஜராத்தின் பால்நகரைச் சேர்ந்த மதுபென், அம்பாபென், கம்புபென், அந்து, நந்த்ரம், லல்லு, ரமுபென், அஞ்சுபென், பாரத், லால்ஜி மற்றும் மதுபென் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக கண்டெய்னர் லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.