சாலையில் கவிழ்ந்த லாரி; உடல் நசுங்கி 75 ஆடுகள் உயிரிழப்பு... நாகையில் பரிதாபம்!


நாகப்பட்டினம் அருகே ஆடுகளை ஏற்றிச்சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 75 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

கவிழ்ந்து கிடக்கும் லாரி

சிவகங்கையைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் ஒவ்வொரு ஆண்டும் டெல்டாவில் அறுவடை முடிந்த பிறகு அங்கு கொண்டு சென்று தனது ஆடுகளை மேய்ப்பது வழக்கம். அவர் மட்டுமல்லாது இராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட கீதாரிகள் இவ்வாறு டெல்டா பகுதிக்கு தங்கள் ஆடுகளை கொண்டு சென்று அடுத்த சாகுபடி தொடங்கும் வரை அங்கேயே தங்கியிருந்து ஆடுகளை மேய்ப்பது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு நாகராஜ் தனக்கு சொந்தமான 200 செம்மறி ஆடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு மேய்ச்சலுக்காக நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம் மணலூர் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார். இன்று காலையில் லாரி கீழ்வேளூர் அருகே உள்ள மணலூர் மேலக்கரை சாலை பகுதியில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லாரி தலைகுப்புறக் கவிழ்ந்ததில் அதிலிருந்த ஆடுகள் லாரிக்கும் வயலுக்கும் இடையே சிக்கிக் கொண்டன. அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆடுகளை மீட்டனர். ஆனாலும் இதில் 75-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உடல் நசுங்கி உயிரிழந்து விட்டன. மீதமுள்ள ஆடுகள் மீட்கப்பட்டன. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் மணி காயமின்றி உயிர் தப்பினார். நாகராஜ் அந்த லாரியில் வராமல் வேறு வாகனத்தில் வந்துகொண்டிருந்ததால் அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கீழ்வேளூர் போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலியான ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் என நாகராஜ் தெரிவித்தார். ஆடுகள் சாலையில் உடல் நசுங்கி உயிரிழந்து கிடந்தது அந்த வழியாக சென்ற பயணிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் வாசிக்கலாமே...

x