உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத்தை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏவாக இருந்தவர் ராஜூ பால். இவர் கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிரயாக்ராஜ் மேற்கு தொகுதியில் 2004ம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில், ரவுடியாக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்த அதீக் அகமதுவின் சகோதரர் அஷ்ரஃப் உடனான அரசியல் போட்டி காரணமாக ராஜூபால் கொல்லப்பட்டார். முன்னதாக கடந்த 2002ம் ஆண்டில் ராஜூபால், அதீக் அகமதுவிடம் தோல்வியைத் தழுவினார். பின்னர் எம்.பி- தேர்தலில் ஆதிக் அகமது தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில்தான் அதீக் அகமதுவின் சகோதரரை ராஜூபால் தோற்கடித்தார்.
இந்த வழக்கை கடந்த 2016ம் ஆண்டு முதல் சிபிஐ விசாரித்து வந்த நிலையில், கைது செய்யப்பட்ட ரஞ்சித் பால், அபித், இஸ்ரார் அகமது, ஜாவேத், குல்ஹாசன் மற்றும் அப்துல் கவி ஆகிய 6 பேருக்கு கிரிமினல் சதி மற்றும் கொலை உள்ளிட்ட பிற கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மற்றொரு குற்றவாளியான ஃபர்ஹான் அகமதுவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தத் தீர்பை, லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு தலைமை வகிக்கும் கூடுதல் மாவட்ட நீதிபதி கவிதா மிஸ்ரா வாசித்தார்.
முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி பிரயாக்ராஜில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அருகே போலீஸ் காவலில் இருந்தபோது ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அதிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.