மருத்துவர்களின் அலட்சியம்; 3 நாட்களாக உயிரிழந்த கருவை சுமக்கும் கர்ப்பிணி... ராஜபாளையத்தில் சோகம்


மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழப்பு என புகார்

ராஜபாளையத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் 3 நாட்களாக உயிரிழந்த குழந்தையை சுமந்து கொண்டு கர்ப்பிணிப் பெண் அலைக்கழிக்கப்பட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அம்மன்பொட்டல் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் இசக்கியை 9 வருடங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள சுரேஷ்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். 4 முறை குழந்தை உருவான போதும், அடுத்தடுத்து கரு கலைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இசக்கி கர்ப்பம் அடைந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக இசக்கியை வீட்டிற்கு அழைத்து வந்த உறவினர்கள், அவருக்கு வளைகாப்பு நடத்தி இருந்தனர்.

ராஜபாளையம் அரசு மருத்துவமனை

கடந்த 22ம் தேதி ராஜபாளையம் அரசு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தனியார் ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுத்துள்ளனர். இதை மறுநாள் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது, 25ம் தேதி நடைபெறும் கர்ப்பிணிகள் முகாமில் பரிசோதனை செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். 25ம் தேதி முகாமிற்கு வந்தபோது, பணியில் இருந்த மருத்துவர் கிரிஜா, ஸ்கேன் அறிக்கையை பார்க்காமலேயே குழந்தை நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார். இதை நம்பி இசக்கியும் வீட்டுக்கு சென்று இருந்தார். கடந்த மூன்று தினங்களாக உடலில் பல்வேறு தொந்தரவுகள் வந்துள்ளதால் இன்று மீண்டும் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு கருவில் உள்ள குழந்தையின் உடலில் அசைவுகள் இல்லாததால் மீண்டும் ஸ்கேன் எடுக்க பரிந்துரை செய்துள்ளனர்.

கர்ப்பிணியை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார்

மீண்டும் ஸ்கேன் எடுத்தபோது, குழந்தை இறந்து 3 நாட்கள் ஆனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளனர். ஆனால் உரிய விளக்கம் இல்லாததால், அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பாதிக்கப்பட்ட இசக்கியின் குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து இறந்த குழந்தையின் உடலை இசக்கியின் உடலில் இருந்து வெளியே எடுக்க, அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் முறையான விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவர்களின் அலட்சியமே இந்த நிலைக்கு காரணம் எனவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் விருதுநகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x