தாதா முக்தார் அன்சாரி சிறையில் மரணம்... நஞ்சு கலக்கப்பட்ட உணவு காரணமா?


தாதா முக்தார் அன்சாரி

உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டாவில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல தாதாவும், முன்னாள் எம்எல்ஏவுமான முக்தார் அன்சாரி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்தார் அன்சாரி

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முக்தார் அன்சாரி மிகப்பிரபலமான தாதா. அந்த கோதாவில் அங்குள்ள மௌசதார் தொகுதியில் போட்டியிட்டு ஐந்து முறை வெற்றி பெற்றவர். அவர் மீது 60-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. உத்தரப்பிரதேசத்தின் வெவ்வேறு நீதிமன்றங்களால் எட்டு வழக்குகளில் அன்சாரிக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் மீதான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதன் காரணமாக பாண்டா சிறையில் தண்டனை காலத்தை அனுபவித்து வந்தார். 60 வயதான அவருக்கு கடந்த 26-ம் தேதி அதிகாலை வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக பாண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலன் பாதிப்பு குறித்தும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்தும் அவரது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

முக்தார் அன்சாரி

அதையடுத்து அவருக்கு லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர். ஆனால், சிறை நிர்வாகம் அதற்கு அனுமதிக்கவில்லை. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக நேற்று அவர் உயிரிழந்தாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

முக்தார் அன்சாரி போலி என்கவுன்டரில் கொல்லப்படலாம் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் ஏற்கெனவே அச்சம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சிறைக்குள் அவருக்கு விஷம் கலந்த உணவு வழங்கப்பட்டதாவும், அதனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் அன்சாரியின் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். 40 நாட்களுக்கு முன்பே விஷம் கலந்த உணவு கொடுக்கப்பட்டது என்றும் அவர் புகார் கூறியுள்ளார். இதனால் இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

x