பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய திருப்புமுனையாக, தேசிய புலனாய்வு அமைப்பு ஒரு குற்றவாளியை கைது செய்தது. அது தொடர்பாக இன்று என்ஐஏ அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளது.
கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் மார்ச் 1 அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர். இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பெங்களூரு போலீஸார், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தற்போது முதல் கைது தொடர்பாக என் ஐ ஏ அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட முஸம்மில் ஷரீப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ அறிவிக்கை தெரிவிக்கிறது. ராமேஸ்வரம் உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கன சதி வேலையில் ஈடுபட்டவர் இவர் என்றும் நம்பப்படுகிறது. குண்டுவெடிப்பை நடத்தியதாகக் கூறப்படும் முக்கிய குற்றவாளி முசாவிர் ஷசீப் ஹுசைன் என்று என்ஐஏ அடையாளம் கண்டுள்ளது. இவருடன் தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளி அப்துல் மதீன் தாஹா என்பவரையும் சேர்த்து என் ஐ ஏ தீவிரமாக தேடி வருகிறது.
குண்டுவெடிப்பை நடத்த முக்கிய குற்றவாளிகளுக்கு தளவாடப் பொருட்களை முஸம்மில் ஷரீப் வழங்கியதாக என்ஐஏ கண்டறிந்துள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட மூவரின் வீடுகளிலும் இன்றைய தினம் சோதனை நடத்தி டிஜிட்டல் சாதனங்களையும் என்ஐஏ கைப்பற்றியது.
“இந்த மூன்று குற்றவாளிகளின் வீடுகளிலும், மற்ற சந்தேக நபர்களின் குடியிருப்பு வளாகங்கள் மற்றும் கடைகளிலும் இன்று சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது பணத்துடன் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. தலைமறைவான குற்றவாளிகளைப் பிடிக்கவும், குண்டுவெடிப்புக்குப் பின்னால் உள்ள பெரிய சதியை வெளிக்கொணரவும் முயற்சிகள் நடந்து வருகின்றன” என்று என்ஐஏ வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
முக்கிய குற்றவாளியை கைது செய்வதற்கு முன்னர் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசத்தின் 18 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விவரங்களை வழங்குபவர்களுக்கு ரூ10 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் என்ஐஏ ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் சந்தேக நபர்கள் தொடர்பாக கையால் வரையப்பட்ட படங்களையும் முன்னதாக என்ஐஏ வெளியிட்டு இருந்தது.