தென்காசி: தென்காசி மாவட்டம், சுரண்டை பேருந்து நிலையம் அருகே நகைக்கடை, அடகு நிறுவனம், சீட்டு நிறுவனம் நடத்தி வருபவர் முருகேச பாரதி (52). இவர், வரகுணராமபுரத்தில் உள்ள சந்தை பகுதிக்கு சீட்டு பணம் வசூலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, மர்ம நபர்கள் அவரை வழிமறித்து, தாக்கி பணப்பையை பறிக்க முயன்றுள்ளனர். இதனால் முருகேச பாரதி கூச்சலிட்டுள்ளார். உடனடியாக அந்த நபர்கள் முருகேச பாரதியை தாக்கி, அவர் அணிந்திருந்த 110 கிராம் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் முருகேச பாரதியை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சுரண்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.