பைனான்ஸ் பிரச்சினை... இளைஞரை சாலையில் வைத்து துள்ளத் துடிக்க வெட்டிக் கொன்ற கும்பல்!


கொலை செய்யப்பட்ட இளைஞர் ஆதித்யன் (23)

கேரளாவில் நிதி விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட இளைஞர், சாலையில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான ஆதித்யன். இவர் அதே மாவட்டத்தில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதித்யனுக்கும், அவர் பணியாற்றி வந்த நிதி நிறுவன உரிமையாளருக்கும் இடையே நிதி விவகாரம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை அன்று காலை, இருவருக்கும் இடையே இது தொடர்பாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் சூழல் உருவாகி உள்ளது.

பொதுமக்கள் முன்னிலையில் வாலிபரை வெட்டிவிட்டு காரில் தப்பியோடிய மர்ம நபர்கள்

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இதையடுத்து நிதிப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இன்று காலை அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார் ஆதித்யன். இந்நிலையில் நேற்று மாலை 7.15 மணியளவில் ஆதித்யன் ஊரூட்டுகலா என்ற பகுதியில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆதித்யனை சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் கழுத்தில் வெட்டுப்பட்டு, படுகாயம் அடைந்த ஆதித்யன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலை செய்யப்பட்ட இளைஞர் ஆதித்யன் (23)

அருகில் இருந்தவர்கள் கொலை செய்துவிட்டு தப்பி ஓட முயன்ற மர்ம நபர்களை பிடிக்க காரின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் கார் கண்ணாடிகள் உடைந்து சிதறியதோடு, காரும் பலத்த சேதமடைந்தது. ஆனாலும் அந்தக் கும்பல் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ஆதித்யனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x