கூடுவாஞ்சேரி: நிதி நிறுவனத்தின் பெயரில் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை காட்டி, வழக்கறிஞரிடம் ரூ. 32.50 லட்சம் பண மோசடி செய்த தம்பதியரை கூடுவாஞ்சேரி போலீஸார் கைது செய்தனர்.
சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த பாத்திமா எழிலரசி இவரது கணவர் மரியா லூயிஸ், சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த விஜய் ஆகியோர் அவர்களது கூட்டாளிகள் சுந்தரம், கார்த்திகேயன் ஆகியோருடன் சேர்ந்து சென்னை, ஆழ்வார்பேட்டையில் ‘எஃப்.எக்ஸ் யோகி அட்வைசர்ஸ் அண்ட் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். தங்கள் நிறுவனத்தில் மூதலீடு செய்தால் மாதம் 4 சதவீதம் வட்டி தருவோம் என ஆசை வார்த்தை கூறி பலரிடம் பல கோடி பெற்று இவர்கள் மோசடி செய்துள்ளனர்.
இந்நிலையில், இதேபோல் பணம் முதலீடு செய்தால் அதற்கு அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி கூடுவாஞ்சேரி நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண்குமார் (42) என்பவரிடம் கடந்த 2022ம் ஆண்டு முதல் சிறுகச் சிறுக ரூ.32.50 லட்சத்தை பெற்று மோசடி செய்துள்ளனர். இந்தப் பணத்துக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே வட்டி கொடுத்துள்ளார். அதன் பிறகு கொடுக்கவில்லை.
அதனை தொடர்ந்து, அசல் தொகையாவது கொடுங்கள் என்று கேட்டபோது, மருத்துவ செலவுக்காக அனைத்தும் செலவழிந்து விட்டது என்றும், தற்போது பணம் இல்லை என்றும் கூறியுள்ளனர். இது தொடர்பாக அருண் குமார் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், மேற்படி மரியா லூயிஸ் அவரது மனைவி பாத்திமா எழிலரசி ஆகியோரை இன்று கைது செய்தனர்.
மேலும், கார்த்திகேயன், விஜய், சுந்தரம் ஆகியோரை தேடி வருகின்றனர். அதிக லாபம் மற்றும் அதிக வட்டி தருவதாக இதுபோன்ற மோசடி நிறுவனங்களின் போலியான விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் தங்களது பணத்தை ஏமாற வேண்டாம் என போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.