லேப் டாப் திருடுவது தான் இவரது வேலை... ஐசிஐசிஐ வங்கி பெண் ஊழியர் கைது!


கைது செய்யப்பட்ட ஜெஸ்ஸி அகர்வால்

ஓட்டல், தங்கும் விடுதிகளில் லேப்டாப்களை குறிவைத்து திருடிய ஐசிஐசிஐ வங்கி பெண் ஊழியரை போலீஸார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ஓட்டல், தங்கும் விடுதிகளில் இருந்து விலை உயர்ந்த லேப்டாப்புகள் திருடு போனது. இதுகுறித்து கோரமங்களா, எச்ஏஎல், இந்திரா நகர் காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பெங்களூரு நகர காவல் துறை ஆணையர் பி.தயானந்தா, லேப் டாப் திருட்டு குறித்து விசாரிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து தங்கும் விடுதி, ஓட்டல்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது இளம்பெண் ஒருவர், லேப் டாப்புகளைத் திருடிச் செல்வது அதில் பதிவாகியிருந்தது. அந்த பெண் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். பெங்களூருவில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் வேலை செய்து வரும் ஜெஸ்ஸி அகர்வால் என்ற இளம்பெண் தான் லேப் டாப் திருடியது தெரிய வந்தது.

ஓட்டல் மற்றும் தங்கும் விடுதியில் காலை நேரங்களில் சாப்பிடச் செல்வது போலச் சென்று லேப் டாப்புகளை ஜெஸ்ஸி அகர்வால் திருடியுள்ளார். அவரிடமிருந்து 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள 24 லேப் டாப்புகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஆணையர் பி.தயானந்தா கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், " ஜெஸ்ஸி அகர்வால் ராஜஸ்தானை சேர்ந்தவர். முன்பு ஒரு வங்கியில் பகுதி நேரமாக வேலை செய்து வந்தார். அப்போது மடிக்கணினியைத் திருடி கைது செய்யப்பட்டவர்" என்று தெரிவித்தார். விலை உயர்ந்த லேப் டாப்புகளை குறிவைத்து வங்கி பெண் ஊழியர் திருடிய சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x