கேரள மாநிலம், காசர்கோட்டில் ஹோலி கொண்டாட மறுத்ததால் பிளஸ் 2 மாணவன் சக மாணவர்களால் கொடூருமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மடிகையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 17 வயது மாணவன் பிளஸ் படித்து வந்தார். இவர் இறுதித் தேர்வினை எழுத 25-ம் தேதியான நேற்று பள்ளிக்குசென்றுள்ளார். தேர்வு முடிந்ததும் சக மாணவர்கள் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை பூசி கொண்டாடியுள்ளனர்.
இதேபோல் பள்ளி மாணவர்கள் பலரும் வண்ணப்பொடிகளை வீசி கொண்டாடிய போது, இவர் மட்டும் ஹோலி கொண்டாட மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மாணவனின் தாடையும் உடைந்துள்ளது.
இதுகுறித்து அறிந்த பெற்றோர், உடனடியாக பள்ளிக்கு வந்து மாணவரை அழைத்து சென்று கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் பள்ளிக்கு அருகில் இருந்த காவல்நிலையத்துக்கும் தகவல் அளித்தனர். இதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், பள்ளி மாணவனை தாக்கிய சக மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் பள்ளியில் ஏற்கெனவே காயமடைந்த மாணவனுக்கும், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் தகராறு இருந்தது தெரியவந்துள்ளது. பள்ளி படிக்கும் காலத்தில் இதுபோன்று முன்விரோதத்துடன் செயல்படுவதை காவலர்கள் கண்டித்தனர்.
படுகாயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரிடம் வாக்குமூலம் பெற்ற பின்னரே உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என போலீஸார் தெரிவித்தனர். ஹோலி பண்டிகையை கொண்டாட மறுத்த மாணவர் ஒருவரை சக மாணவர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.