‘பயங்கரவாதியை விடுதலை செய்வதாக ரூ133 கோடி பெற்றார் கேஜ்ரிவால்’ -காலிஸ்தான் பிரிவினைவாதி பன்னூன் குற்றச்சாட்டு


கேஜ்ரிவால் குறித்தான வீடியோ பதிவுடன் குர்பத்வந்த் சிங் பன்னூன்

காலிஸ்தான் பிரிவினைவாத குழுக்களிடம் இருந்து அரவிந்த் கேஜ்ரிவால் சுமார் ரூ133 கோடி பெற்றதாக, குர்பத்வந்த் சிங் பன்னுன் என்ற சீக்கிய பிரிவினைவாத தலைவர் குற்றம்சாட்டி உள்ளார்.

நீதிக்கான சீக்கியர்கள் என்ற காலிஸ்தான் அமைப்பின் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டிருக்கும் குர்பத்வந்த் சிங் பன்னுன், தற்போது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக பெரும் குற்றச்சாட்டு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதனால் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கேஜ்ரிவால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்களில், 2014 - 2022 இடையே கட்சி நிதி என்ற பெயரில் ஆம் ஆத்மிக்கு காலிஸ்தான் குழுக்கள் வசமிருந்து 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான (சுமார் ரூ133.54 கோடி) நிதியுதவியை கேஜ்ரிவால் பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பதில் உதவியாக சிறையில் இருக்கும் தேவிந்தர்பால் சிங் புல்லர் என்னும் காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதியை விடுவிக்க உதவுவதாக கேஜ்ரிவால் உத்தரவாதம் அளித்திருந்ததாகவும் பன்னூன் தெரிவித்தார். டெல்லியில் 1993-ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேவிந்தர்பால் சிங் புல்லர் முக்கிய குற்றவாளி ஆவார். இந்த டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர்; 31 பேர் காயமடைந்தனர்.

கேஜ்ரிவால் மற்றும் காலிஸ்தானி தலைவர்கள் இடையிலான சந்திப்பு 2014-ல் நியூயார்க்கில் நடைபெற்றதாக பன்னூன் தெரிவித்திருக்கிறார். அப்போது பதவியில் இல்லாத கேஜ்ரிவால், டெல்லியில் பதவியேற்ற 5 மணி நேரத்தில் புல்லர் விடுதலைக்கான ஏற்பாடுகளில் இறங்குவதாக உறுதி அளித்திருந்ததாகவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் குண்டுவைப்போம் என முன்னதாக இந்த குர்பத்வந்த் சிங் பன்னூன் மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை சம்பவத்தில் இந்தியாவின் உளவுத்துறைக்கு எதிராக கனடா அரசு குற்றம்சாட்டியது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற பன்னூனை இந்திய உளவுத்துறை ஏஜெண்டுகள் கொல்ல முயற்சிப்பதாக அமெரிக்காவும் குற்றம்சாட்டியது.

வீடியோ பதிவில் பன்னூன்

இவற்றில் மத்தியில், டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் கேஜ்ரிவாலுக்கு எதிராக பன்னூன் கிளப்பியிருக்கும் குற்றச்சாட்டு, அரசியல் தளங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. மார்ச் 28 வரையிலான அமலாக்கத்துறை காவலை அடுத்து நீதிமன்ற காவலுக்கு கேஜ்ரிவால் செல்லும்போது, அவர் தனது டெல்லி முதல்வர் பதவியை ரஜினாமா செய்ய வேண்டும் என பாஜக வற்புறுத்தி வருகிறது. ஆனால் கேஜ்ரிவால் ராஜினாமா செய்யமாட்டார் என ஆம் ஆத்மி தலைவர்கள் முழங்கி வருகின்றனர்.

கேஜ்ரிவால் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி பெரும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இண்டியா கூட்டணி சார்பிலும் மார்ச் 31 கண்டனக் கூட்டம் நடைபெற உள்ளது. தேர்தல் பத்திர மோசடி விவகாரத்தை திசை திருப்பவே கேஜ்ரிவால் கைதை வைத்து ஆளும் பாஜக அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இவற்றின் மத்தியில் புதிய குண்டு வீச்சாக பன்னூன் வீடியோ அமைந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!

லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

x