மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலில் படுகாயமடைந்தோர் மத்தியில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது அங்கே கவலையையும், சீற்றத்தையும் ஒரு சேர கிளப்பியுள்ளது. மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் அதிபர் புதின் புதிய சபதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வெள்ளி மாலை இசைக்கச்சேரி அரங்கம் ஒன்றினுள் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 101 பேர் படுகாயங்களுடன் மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவருவதும், அவர்களில் பெரும்பாலானோர் கவலைக்கிடமாக இருப்பதும் ரஷ்யாவில் கவலையை அதிகரித்துள்ளது.
இதனிடையே துப்பாக்கிச்சூடு மற்றும் கையெறி குண்டுகள் தாக்குதலின் மூலம் இசையரங்கு தாக்குதலில் 137 பேர் நேரிடையாக கொல்லப்பட்டதன் பின்னணியில், கைது செய்யப்பட்ட 4 பயங்கரவாதிகளும் நீதிமன்றத்தில் ஞாயிறு அன்று ஆஜர்படுத்தப்பட்டனர். மாஸ்கோவின் பாஸ்மன்னி மாவட்ட நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும் மே 22 வரை காவலுக்கு உத்தரவிட்டது.
விசாரணை முடிவில் 4 நபர்களுக்கும் ஆயுள் முழுமைக்கும் சிறையில் கழிக்கும்படியான தண்டனை அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. நால்வரில் தஜிகிஸ்தானை சேர்ந்த ஒருவர் தன்னுடைய குற்றத்தை முழுமையாக ஒப்புக்கொண்டதாக நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.
இதனிடையே "மாஸ்கோ காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குலின்பின்னாலிருப்பவர்கள் எவராயிலும் அவர்கள் முழுமையாக அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்” என ரஷ்ய அதிபர் புதின் சபதம் வெளியிட்டுள்ளார். மேலும் மாஸ்கோ பயங்கரவாத செயலுக்குப் பின்னே உக்ரைன் இருப்பதாகவும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் உக்ரைனுக்கு தப்பிச்செல்ல முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் புதின் குற்றச்சாட்டுக்கு உக்ரைன் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளது.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பால் நடத்தப்பட்ட ஐரோப்பாவின் மிக மோசமான தாக்குதலாக அறியப்படும் மாஸ்கோ சம்பவம் தொடர்பாக, அந்த அமைப்பு டெலகிராமில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ’இஸ்லாமுக்கு எதிராக போராடும் நாடுகளுடனான மூர்க்கமான போரின் ஒரு பகுதியாக மாஸ்கோ தாக்குதலை தாங்கள் நடத்தியதாக’ ஐஎஸ் அமைப்பு அந்த வீடியோவில் அறிவித்துள்ளது. "இயந்திர துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் தீக்குண்டுகள் ஏந்திய நான்கு ஐஎஸ் போராளிகளால் மாஸ்கோ தாக்குதல் நிறைவேற்றப்பட்டது" என்றும் அந்த வீடியோ தெரிவிக்கிறது.
மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல் சம்பவம் ரஷ்யர்களை அதிகம் பாதித்துள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் குவிந்து இரத்ததானம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக மருத்துவமனைகளின் வெளியே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.
உலகமெங்கும் வாழும் ரஷ்யர்கள் ரஷ்ய தூதரகங்களுக்கு வெளியே மலர் அஞ்சலி செலுத்தினர். மேலும் ரஷ்யாவில் மரண தண்டனைக்கான தடையை நீக்கி, பயங்கரவாதிகள் நால்வரையும் பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் என்றும் அவர்கள் கோரி வருகின்றனர். மாஸ்கோ தாக்குதலை அடுத்து ஐரோப்பிய நாடுகள் பலவும் தங்கள் உள்நாட்டு பாதுகாப்பில் புதிய கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
இதையும் வாசிக்கலாமே...
இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!
லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!
பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!
யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!
'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!