குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், வழுதலம்பேடு பகுதியில் உள்ள அடுக்குமாடிக்குடியிருப்பில் வசித்து வந்தவர் அருண்சந்திரா (37). இவர் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்களிடம் மத்திய அரசின்கீழ் இயங்கும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இடம் வாங்கித் தருவதாகவும், ராணுவத்தில்வேலை வாங்கித் தருவதாகவும் கூறி சுமார் 15 பேரிடம் ரூ.45 லட்சம் வரை பணம் பெற்று,வேலையும் வாங்கித்தராமல் பணத்தையும் கொடுக்காமல், மோசடி செய்துவிட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தலைமறைவாகிவிட்டார்.
இதனால், பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் அவரை தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில், குன்றத்தூர் அருகே அருண் சந்திரா வந்ததைக் கண்ட பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், அவரை மடக்கிப் பிடித்து குன்றத்தூர் போலீஸில் ஒப்படைத்தனர் குன்றத்தூர் போலீஸார் அருண் சந்திராவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணத்தைப் பெற்று தலைமறைவானவர் மும்பையில் தலைமறைவாக இருந்துவந்ததும் விசாரணையில் தெரியவந்தது.