மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் காரமடை-சிறுமுகை சாலையில் சிவா நகரில் உள்ள ஒரு வீட்டில் சிறுமியை அடைத்து வைத்துள்ளதாக, மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் புகார் வந்தது. இது குறித்து குழந்தைகள் நல அலுவலர் ராஜேஸ்வரி, காரமடை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
காவல் ஆய்வாளர் ஞான சேகரன் தலைமையில் நேற்று முன்தினம் அங்கு போலீஸார் சோதனை நடத்தினர். அந்த வீட்டில் 15 வயது சிறுமியை ஒரு கும்பல் கடத்தி அடைத்து வைத்திருந்ததும், அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. சிறுமியை போலீஸார் மீட்டனர்.
இவ்விவகாரத்தில், பல்லடம் இச்சிப்பட்டியைச் சேர்ந்த தர்மராஜ் (23), திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜதுரை (30), உதகையைச் சேர்ந்த மோனிஷா (23), திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த கீதா (24), சென்னையைச் சேர்ந்த பவானி (24) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸார் கூறும்போது, ‘‘மீட்கப்பட்ட சிறுமியிடம், கைதான மோனிஷா பழகி வந்தார். பின் ஆசை வார்த்தை கூறி, வீட்டைவிட்டு வெளியே அழைத்து வந்து, சிவா நகரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்தார். பாலியல் தொழிலில் ஈடுபட ஒத்துழைக்குமாறு சிறுமியை 5 பேரும் சித்ரவதை செய்துள்ளனர். இதையடுத்து, அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்,’’ என்றனர்.