புதுச்சேரி: சைபர் க்ரைம் போலீஸ் முயற்சியால், புதுச்சேரியில் ஒரே நாளில் பொதுமக்களின் ரூ.1.9 கோடி பணம் இணையவழி மோசடிக்காரர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் ஒருவரை போனில் தொடர்பு கொண்ட மர்ம ஆசாமிகள், “உங்கள் பெயர் மற்றும் ஆதார்கார்டைப் பயன்படுத்தி கொரியர் மூலமாக வெளிநாட்டில் இருந்துபோதை மருந்து கடத்தப்பட்டுள்ளது. மேலும் பல கோடி ரூபாய் வங்கி பரிவர்த்தனை உங்கள் வங்கிக் கணக்கில் நடந்துள்ளது. நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு, ரூ. 1 கோடி பணத்தை அனுப்பினால் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் பயந்து போன அந்தநபர், ரூ.34 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் சொன்ன வங்கிக்கணக்குக்கு அனுப்பியுள்ளார். அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுபற்றி புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய சைபர் க்ரைம் போலீஸார் சம்மந்தப்பட்ட வங்கியின் பொது மேலாளரை தொடர்பு கொண்டு, மேற்கண்ட விவரங்களை கூறி, குறிப்பிட்ட வங்கிக் கணக்கை முடக்கினர்.
இதற்கிடையே அந்த வங்கிக் கணக்கில் ரூ.1 கோடி பணம் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த கணக்கு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இதேபோல் மேட்டுப்பாளையத்தில் நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர் ஒருவரிடம் இதே காரணத்தை சொல்லி இணைய வழி மோசடிக்காரர்கள் மிரட்டியுள்ளனர். அதனை உண்மையென நம்பிய அவரும் ரூ.75லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு இணைய வழி மோசடிக்காரர்கள் சொன்ன வங்கிக் கணக்கில் செலுத்த புதுச்சேரியில் உள்ள அந்த குறிப்பிட்ட வங்கிக்கு சென்றுள்ளார். இதில் மோசடி நடப்பதை உணர்ந்த வங்கி மேலாளர், உடனே புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சைபர் க்ரைம்போலீஸார் அங்கு வந்து, ‘பணத்தை செலுத்த வேண்டாம்; இது இணையவழி மோசடி நபர்களின் வேலை’ என்று அந்த தொழிலதிபரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் ரூ. 75 லட்சம் பறிபோவது தடுக்கப்பட்டது.
இப்படியாக ஒரே நாளில் ரூ.1கோடியே 9 லட்சம் பணம்இணையவழி மோசடிக்காரர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாக சைபர் க்ரைம் போலீஸார் தெரிவித்தனர்.