தனுஷ்கோடியில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தில் ஆட்டோ மோதி விபத்து; 6 பேர் காயம்


தனுஷ்கோடியில் விபத்திற்குள்ளான ஆட்டோ, சரக்கு வாகனம்.

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் உள்ளிட்ட 6 பேர் காயம் அடைந்தனர்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு மேற்கு வங்கம் மற்றும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பக்தர்கள் 8 பேர், இன்று முற்பகல் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை கடற்கரை பகுதிகளுக்கு சுற்றிப் பார்க்க ராமச்சந்திரன் (35) என்பவரது வாடகை ஆட்டோவில் சென்றனர். ராமேசுவரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, ஜடாயு தீர்த்தம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த சிறிய ரக சரக்கு வாகனத்தில் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.

இதில் வடமாநில பக்தர்கள் தினேஷ் வர்மா (47), சுர்ஜான் குல்லூ (38), அர்ஜூன் (39), ராஜ்குமார் (33) நிஷாந்த் (24) ஆட்டோ ஓட்டுநர் ராமச்சந்திரன் ஆகிய 6 பேர்களுக்கு ரத்தக் காயமும் மற்ற மூவருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை தனுஷ்கோடி போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் ஆறு பேரையும் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தனுஷ்கோடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x