சுற்றுலா சென்ற இளம்பெண் கோவா ரிசார்ட்டில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் ஷியார்(47). இவர் விமானத்தில் சென்ற போது இளம்பெண் ஒருவர் பழக்கமாகியுள்ளார். விமானப் பழக்கத்தால் இருவரும் தங்களின் செல்போன் எண்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். இதன் பின்னர் அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டனர்.
இந்நிலையில், ஆக.23-ம் தேதி ஷியாரும், அந்த இளம்பெண்ணும் தனித்தனியாக கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஷியார், வடக்கு கோவாவில் பனாஜியில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள அசோனாரா கிராமத்தில் உள்ள ரிசார்ட்டில் தான் தங்கியிருப்பதாக கூறியுள்ளார்.
அத்துடன், இயற்கை வனப்பு மிகுந்த இப்பகுதியை நீங்கள் வந்து பார்க்க வேண்டும் என்று ஷியார் அழைத்துள்ளார். இதை நம்பி, அந்த இளம்பெண்ணும், அசோனாராவிற்குச் சென்றுள்ளார்.
அப்போது தனது அறைக்கு அழைத்துச் சென்ற ஷியார், அங்கு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதை வெளியே சொன்னால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். ஆனாலும், அந்த இளம்பெண், தனக்கு நடந்த கொடுமை குறித்து காவல் துறையில் புகார் செய்தார்.
இதன் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு வடக்கு கோவாவில் உள்ள மபுசா நகருக்கு அருகில் உள்ள திவிம் கிராமத்தில் பதுங்கியிருந்த லட்சுமணன் ஷியாரை போலீஸார் இன்று கைது செய்தனர். சுற்றுலா வந்த பெண் கோவாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.