பலே குற்றவாளி கொலையில் அதிர்ச்சி! 2001ல் தந்தை படுகொலை... 2023ல் பழிதீர்த்த மகன்


செங்குன்றம் அருகே பணிக்குச் சென்று திரும்பி பழைய கொலை குற்றவாளி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 22 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை கொலைக்கு மகன் பழி தீர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எருக்கஞ்சேரி நேருநகரை சேர்ந்தவர் செய்யா என்கிற செழியன் (55). இவர் செங்குன்றம் அடுத்து வடபெரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு செழியன் வேலை முடிந்து வடபெரும்பாக்கம் பிரதான சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று செழியனை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.‌ இதில் செழியன் ரத்த வெள்ளத்தில் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.‌ தகவலின் பேரில் அங்கு சென்ற செங்குன்றம் போலீஸார் செழியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கொடுங்கையூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான செழியன் கடந்த 2001ம் ஆண்டு எருக்கஞ்சேரியில் பிரபாகரன் என்பவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தது தெரியவந்தது.‌

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த செழியன் அதே ஆண்டு பிரபாகரன் தம்பி பாபு என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டு கடந்த 3 ஆண்டு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த அவர் திருந்தி வாழ நினைத்து வடபெரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் செழியனை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில் தந்தை கொலைக்கு பழி தீர்க்க எண்ணிய பிரபாகரனின் மகன் சதீஷ் 22 ஆண்டு கழித்து தனது நண்பர்களுடன் சேர்ந்து செழியனை கொலை செய்து தந்தை கொலைக்கு பழி தீர்த்துக்கொண்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே செழியனை கொலை செய்த சதீஷ் இன்று காலை தனது கூட்டாளிகள் 4 பேருடன் செங்குன்றம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

22 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை கொலை செய்த குற்றவாளியை மகன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x