உத்தராகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக உள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
உத்தராகண்டின் உத்தர்காசி பகுதியில் சில்கைரா பகுதியில் சாலை அமைக்கும் பணிக்கு சுரங்கம் தோண்டும் பணியின் போது ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
இவர்களை மீட்பதற்கான பணிகள் கடந்த 8 நாட்களை கடந்து 9வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் அவர்களை தொடர்பு கொள்வதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது.
இதையடுத்து 6 அங்குல குழாய் ஒன்றை தொழிலாளர்கள் இருக்கும் பகுதிக்கு செலுத்தி, அதன் மூலம் அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தொழிலாளர்கள் சிக்கி இருக்கும் பகுதிக்கு பைப் சென்றதையடுத்து அவர்களுக்கு உணவளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே தொழிலாளர்கள் அனைவரும் நலமாக உள்ளனர் என்பதை கண்டறிவதற்காக சிறிய ரக கேமரா ஒன்றை மீட்பு படையினர் குழாய் வழியாக செலுத்தி சோதனை செய்தனர். அப்போது 41 தொழிலாளர்களும் பத்திரமாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களுடன் பேசிய அதிகாரிகள் அவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மன உறுதியுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. விரைவில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என மீட்பு படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.