ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1,760 கோடி மதிப்புள்ள பணம், மது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களில் தேர்தல் முடிந்துவிட்டன. ராஜஸ்தானில் வரும் 25-ம் தேதியும் தெலங்கானாவில் 30-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே, இந்த 5 மாநிலங்களிலும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1,760 கோடி மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பரிசுபொருட்கள், மது, போதைப்பொருள், ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த 5 மாநிலங்களில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பைப் போல (ரூ.239.15 கோடி) 7 மடங்கு அதிக மதிப்பிலான பொருட்கள் இப்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு, குஜராத், கர்நாடகா உட்பட 6 மாநிலங்களில் நடந்த தேர்தலின்போது ரூ.1,400 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய தேர்தலுடன் ஒப்பிடும்போது 11 மடங்கு அதிகம் ஆகும்.