சிறைக்குள் பிரபல ரவுடிக்கு சரமாரி வெட்டு; தடுக்க முயன்ற அதிகாரி படுகாயம்: கேரளாவில் பரபரப்பு!


கேரளா விய்யூர் சிறைச்சாலையில் ரவுடி அனீஷ் மீது தாக்குதல்

கேரளா மாநிலம் விய்யூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி மரடு அனீஷ் என்பவரை சிறை வளாகத்திற்குள் இருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதான அனீஷ் என்பவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எர்ணாகுளம், ஆலப்புழா, பாலக்காடு மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அனீஷ் மீது கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதையடுத்து கடந்த நவம்பர் 8-ம் தேதி தொடர் குற்றச்செயலில் ஈடுபடுவோர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கேரள மாநில போலீஸார் அவரை கைது செய்து திருச்சூரில் உள்ள விய்யூர் சிறைச்சாலையில் அடைத்திருந்தனர்.

உச்சகட்டப் பாதுகாப்பு கொண்ட இந்த சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அனீஷிற்கு கழுத்து மற்றும் முதுகு வலி இருந்ததால், சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தலை, கழுத்தில் காயமடைந்த அனீஷ்

இந்த நிலையில் இன்று சிறைக்குள் மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் மறைந்திருந்த 2 சிறைவாசிகள், மதிய உணவிற்காக அனீஷ், போலீஸ் அதிகாரி பினாய் என்பவருடன் வெளியில் வந்த போது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பிளேடுகளால் இருவரும் அனீஷைத் தாக்கியதில் அவருக்கு கழுத்து மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தடுக்க முயன்ற போலீஸ் அதிகாரி பினாய்க்கும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து இருவரையும் போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அனீஷ்

இதனிடையே அனீஷை தாக்கிய அஷ்ரப், உசேன் ஆகிய இருவரையும் சிறைச்சாலை போலீஸார் பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். அனீஷிற்க்கும் அவர்களுக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு கொண்ட விய்யூர் சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றுள்ள இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சேலையில் ஒய்யாரமாய் வலம் வரும் பிரபல நடிகை

x