'நீ அவ்ளோ பெரிய ஆளா'... துணை நடிகரை மிரட்டிய இன்ஸ்பெக்டர்!


திருநாவுக்கரசு

சாலையோரத்தில் பெட்டிக்கடை நடத்தி வரும் துணை நடிகரிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார் செம்பியம் காவல் நிலைய ஆய்வாளர். அந்த மிரட்டல் வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் சினிமாவில் சிறு, சிறு வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கார்த்தி மற்றும் சந்தானம் நடிப்பில் வெளியான 'அலெக்ஸ் பாண்டியன்' திரைப்படத்தில் சண்டைக் காட்சி ஒன்றில் திருநாவுக்கரசு நடித்த போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் சினிமா வாய்ப்பு கிடைக்காததால் சிரமப்பட்டு வந்தார். இந்த நிலையில், பெரம்பூர் பகுதியில் தனது நண்பருக்குச் சொந்தமான பெட்டிக்கடை ஒன்றை திருநாவுக்கரசு எடுத்து நடத்தி வருகிறார்.

கடந்த 20-ம் தேதி முதல் இந்த பெட்டிக்கடை நடத்தி வரும் துணை நடிகர் திருநாவுக்கரசிடம் செம்பியம் காவல் நிலைய காவலர்கள் நேரில் சென்று ஆய்வாளர் ஐயப்பனை வந்து சந்திக்குமாறு தெரிவித்துள்ளார்.

ஆனால், திருநாவுக்கரசு ஆய்வாளரை சந்திக்காததால் ஆத்திரமடைந்த காவலர்கள் மீண்டும், மீண்டும் அவரிடம் சென்று ஆய்வாளரை சந்திக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். அப்போது திருநாவுக்கரசு, நான் ஏன் ஆய்வாளரை சந்திக்க வேண்டும், சட்டப்படி இந்த கடையை நடத்தி வருகிறேன் எனத் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ளதாக காவலர்கள் ஆய்வாளரை வந்து சந்தித்தே ஆகவேண்டும். இல்லையென்றால் எப்படி கடை நடத்துகிறாய் என பார்ப்போம் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

சினிமா துணை நடிகரிடம் மாமூல் கேட்டு மிரட்டும் செம்பியம் காவல் நிலைய ஆய்வாளர்

எவ்வளவு கூறியும் திருநாவுக்கரசு, தன்னை வந்து பார்க்காததால் ஆத்திரமடைந்த ஆய்வாளர் ஐயப்பன் நேற்று முன்தினம் தானே நேராக அவரது கடைக்குச் சென்று ஜீப்பில் அமர்ந்தவாறு அவரை அழைத்துள்ளார். இதனால் பதறிப்போன துணை நடிகர் திருநாவுக்கரசு, உடனே ஆய்வாளிடம் சென்றார்.

அப்போது ஆய்வாளர் ஐயப்பன், நீ என்ன பெரிய ஆளா? வந்து பார்க்கச் சொன்னா பார்க்கமாட்டியா என அதிகாரத் தோரணையில் பேசியதுடன் அவரை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் நீ என்ன கடைக்கு வாடகை, கரண்ட் பில் கட்டுகிறாயா? எப்படி சாலையோரம் கடை போட்டாய் என சரமாரியாகத் திட்டி தீர்த்துள்ளார். ஒருகட்டத்தில் உன்னைக் காலை ஓடித்து சிறையில் தள்ளிவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைராகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திருநாவுக்கரசு கூறுகையில், " 'அலெக்ஸ் பாண்டியன்' சூட்டிங்கில் எனக்கு காலில் எலும்பு முறிவு எற்பட்டது இதனால் படவாய்ப்புகள் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறேன். எனவே, எனது நண்பரான மாற்றுத்திறனாளி ஒருவர் நீதிமன்ற உத்தரவு பெற்று இந்த பெட்டிக்கடையை பல ஆண்டுகளாக நடத்தி வந்தார். பின்னர் அவரால் இந்த கடையை நடத்த முடியவில்லை.

மேலும் எனக்கும் பிழைப்புக்கு வேறு வழியில்லாததால் இந்த கடையை நான் எடுத்து நடத்தி வருகிறேன். இந்த சூழ்நிலையில் ஆய்வாளர் ஐயப்பன் மற்றும் காவலர்கள் மாமுல் கேட்டு தொல்லை கொடுத்து வருகின்றனர். மாமூல் தரவில்லை என்றால் கடையை நடத்த விடமாட்டோம் என மிரட்டல் விடுக்கின்றனர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு தரவேண்டிய காவல்துறையினரே மாமூல் கேட்டு் மிரட்டுவது எந்த வகையில் நியாயம்'' என கேள்வி எழுப்பியுள்ளார்.

x