வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஏ.எம்.பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கடந்த 1991-96 ம் ஆண்டு மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக 38 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்த ஏ.எம்.பரமசிவன், அவரது மனைவி நல்லம்மாள் ஆகியோர் மீது 1997ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பரமசிவனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், அவரது மனைவி நல்லம்மாளுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பரமசிவன் மற்றும் அவரது மனைவி நல்லம்மாளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2000ம் ஆண்டு மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்தபோது, 2015ம் ஆண்டு மார்ச் மாதம், பரமசிவன் மரணமடைந்தார். இந்நிலையில், அவர் மனைவி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு கடந்த 20 ஆண்டுக்ளுக்கும் மேல் நிலுவையில் இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்தார். மறைந்த அமைச்சர் பரமசிவனின் மனைவி நல்லம்மாளின் மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனையை அனுபவிக்கச் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Shalini Ajith | அஜித் காட்டிய அக்கறை... வாழ்க்கையை ‘அமர்க்களமாய்’ மாற்றிய சினிமா!
துறைமுகத்தில் 60 படகுகள் எரிந்து நாசம்; கதறும் மீனவர்கள்!
1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டுக்கள்... அத்தாளநல்லூர் ஆய்வில் கண்டுபிடிப்பு!
ஐசியுவில் விஜயகாந்த்... என்ன சொல்கிறது மருத்துவமனை நிர்வாகம்?
பிக் பாஸில் மீண்டும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி... யார் அந்த மூன்று பேர்?