11 நகைக்கடைகள்... பல கோடி ரூபாய் மோசடி... 14 பேரை போலீஸிடம் பிடித்துக்கொடுத்த ஏஜென்டுகள்


சேலம், நாமக்கல், தருமபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் 11 இடங்களில் தங்க நகைக்கடை நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் சம்பந்தப்பட்ட நகைக்கடை மேலாளர் உள்பட 14 பேரை ஏஜென்டுகள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

சேலம் வீராணம் அருகே உள்ள வலசையூர் பகுதியைச் சேர்ந்தவர் சபரி சங்கர். இவர் சீலநாயக்கன்பட்டி, அம்மாப்பேட்டை, ஆத்தூர் மற்றும் நாமக்கல், திருச்செங்கோடு, கரூர், திருச்சி, கோவை, தருமபுரி, அரூர் உட்பட 11 இடங்களில் நகைக்கடை நடத்தி வந்தார். வாடிக்கையாளர்களிடம் மாத சீட்டு, நகை சேமிப்பு திட்டம், பழைய நகைகளுக்கு புதிய நகை வழங்கும் திட்டம், பொங்கும் தங்கம் திட்டம், முதலீட்டுக்கு கூடுதல் வட்டி என பல்வேறு திட்டங்களை சபரி சங்கர் அறிவித்தார். இதனை நம்பி ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்க நகை திட்டத்தில் சேர்ந்து பணத்தை செலுத்தினர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சபரி சங்கர் அனைத்து நகைக்கடைகளையும் திடீரென மூடிவிட்டு தலைமறைவானார். இதையறிந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அயோத்தியாப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், நகை சீட்டு மற்றும் சகோதரியின் திருமணத்துக்கு நகை வாங்குவதற்காக ரூ.11 லட்சம் செலுத்தியதாகவும், தற்போது நகைக்கடை உரிமையாளர் தலைமறைவாகிவிட்டதாகவும் கூறியிருந்தார். இதேபோல, வாடிக்கையாளர்கள் பலரும் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர். பலரிடம் பலகோடி ரூபாய் மோசடி செய்ததாக புகாரில் கூறியிருந்தனர்.

இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி சபரி சங்கர், கடை மேலாளர்கள் கவின், அஜித் உள்ளிட்டோர் மீது மோசடி உட்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நகைக் கடையில் முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் நகை சீட்டு திட்டத்தில் சேர்த்து விட்ட கடை ஏஜென்டுகளிடம் பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறு வற்புறுத்தி வந்தனர். இதில், நகைக்கடையின் உயர் பொறுப்பில் இருந்து வந்த மேலாளர் உட்பட 14 பேரை ஏஜென்டுகள் பிடித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று அழைத்து வந்து போலீஸிடம் ஒப்படைத்தனர். 14 பேரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


நடிகர் கமல் பன்றியை வளர்கிறார்... பிரபல பாடகி ஆவேசம்!

x