தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாமல் இருந்து வந்த நடிகை ஜெயப்பிரதாவுக்கு உத்தரபிரதேச நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்துள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்.
நடிகை ஜெயப்பிரதா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்ளில் நடித்தவர். குறிப்பாக, 1970-80 காலகட்டங்களில் தமிழ்த்திரையுலகில் சூப்பர் ஹிட் அடித்த `நினைத்தாலே இனிக்கும்’, `சலங்கை ஒலி' உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சிலும் இடம்பெற்றவர். கடைசியாக கமல் நடித்த தசாவதாரம் படத்திலும் ஒரு கேமியோ ரோல் செய்திருந்தார். நடிப்பில் மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருந்த ஜெயப்பிரதா, 1990-களின் பிற்பகுதியில் தெலுங்கு தேசக்கட்சியில் இணைந்து பணியாற்றினார்.
பின்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகி, சமாஜ்வாடி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட ஜெயப்பிரதா, 2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். தொடர்ந்து 2014 வரை எம்.பி-யாக இருந்தார். 2019-ல் பா.ஜ.க-விலும் இணைந்தார்.
இந்த நிலையில் 2019ம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நடிகை ஜெயப்பிரதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகாமல் நடிகை ஜெயப்பிரதா இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை ஜெயப்பிரதா ஆஜராகவில்லை. இதையடுத்து, ஜெயப்பிரதா ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை உத்தரபிரதேச நீதிமன்றம் பிறப்பித்து இருக்கிறது. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.