கோவை உக்கடம் பெரிய குளத்தில் தூண்டியல் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர், நீரில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள பெரிய குளத்தில் மீன்கள் வளர்த்து விற்பனை செய்ய மாநகராட்சியின் சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இதை டெண்டர் எடுத்துள்ள மீனவர்கள், மீன் வளர்ப்பதோடு, அவற்றை பிடித்து விற்பனை செய்தும் வருகின்றனர். இங்கு கட்லா, ரோகு, ஜிலேபி உள்ளிட்ட மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. குளக்கரையில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளதால், ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் பொழுதுபோக்கிற்காக வந்து செல்கின்றனர். பெரிய குளத்தை சுற்றியுள்ள இளைஞர்கள் அவ்வப்போது தூண்டில் போட்டு மீன்பிடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது இக்பால் (55) என்பவர் இன்று காலை குளக்கரையில் அமர்ந்து தூண்டியல் போட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர், நீரில் தவறி விழுந்து தத்தளித்தார். இதனைக் கண்ட அப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தவர்கள், அவரை மீட்க முயற்சித்த போதும் முடியாததால், அவர் நீரில் மூழ்கினார்.
இது குறித்து தகவலறிந்த போலீஸார் உடனடியாக விரைந்து வந்து, இக்பாலை நீரில் இருந்து மீட்டனர். இருப்பினும் அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, குளத்தை சுற்றிலும் பாதுகாப்பிற்காக கம்பிவேலிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், இளைஞர்கள் அத்துமீறி குளக்கரைக்குள் நுழைந்து இது போன்று ஆபத்தான முறையில் மீன்பிடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனை தடுக்க, மாநகராட்சி சார்பில் தனியாக மீன்பிடிக்க பாதுகாப்பான இடம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.