நீலகிரி அருகே மின் கம்பியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களுக்குள் காட்டு யானைகள் அவ்வபோது உணவு தேடி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக யானை கூட்டம் ஒன்று சுற்றி வருகிறது. அங்கு விவசாய தோட்டங்களை சேதப்படுத்தியதோடு, அறுவடை செய்து வைக்கப்பட்டிருந்த தக்காளி, வாழை உள்ளிட்டவற்றையும் உண்டதோடு சேதப்படுத்திவிட்டு சென்றன.
மற்றொரு புறம் பல்வேறு விபத்துக்களால் யானைகள் உயிரிழப்பதும் தொடர் கதையாகி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் 30க்கும் மேற்பட்ட யானைகள் தமிழகத்தில் உயிரிழந்துள்ளன. அதிலும் 5-க்கும் மேற்பட்ட யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளன. இது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மேலும் ஒரு காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. நீலகிரி மாவட்டம் புளியம்பாறை என்ற பகுதியில் இன்று காலை ஆண் யானை ஒன்று உணவு தேடி வந்துள்ளது. அங்கிருந்த மரம் ஒன்றை உணவுக்காக தள்ளியது. அப்போது, மரத்திற்கு அருகே சென்ற உயர் மின் அழுத்த கம்பி அறுந்து யானை மீது விழுந்துள்ளது. அதில், மின்சாரம் தாக்கி அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. காலை அவ்வழியாக சென்ற அந்தப்பகுதி மக்கள் உடனடியாக இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் யானையின் சடலத்தை மீட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இதுதொடர்பாக விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.