துபாயில் மலர்ந்த காதல்... சுற்றுலா விசாவில் தமிழகம் வருகை; கணவருடன் குடும்பம் நடத்திய இலங்கைப் பெண் கைது!


புஷ்பலீலா

சுற்றுலா விசாவில் வந்து தமிழ்நாட்டில் காதல் கணவருடன் குடியேறிய இலங்கை பெண் கடலூர் மாவட்ட போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், டி.வி.புத்தூா் கிராமத்தில் இலங்கையைச் சேர்ந்த பெண் வசித்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் அந்தக் கிராமத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இலங்கையைச் சேர்ந்த புஷ்பலீலா(37) என்பவர் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்து இங்கேயே தங்கிவிட்டது தெரிய வந்தது.

புஷ்பலீலா துபாய் நாட்டில் வேலை செய்தபோது அங்கு பணிபுரிந்த டி.வி.புத்தூரைச் சேர்ந்த செந்தில்குமாருடன் அவருக்கு காதல் ஏற்பட்டதாம். இதையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு இருவரும் தமிழ்நாட்டுக்கு வந்து விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

புழல் சிறை

பின்னர் இருவரும் மீண்டும் துபாய் சென்றுள்ளனர். அங்கு விசா காலம் முடிவுற்றதும் செந்தில்குமார் மீண்டும் தமிழ்நாடு திரும்பிவிட்டார். இதனால் அவரை பிரிந்து இருக்க விரும்பாத புஷ்பலீலா கடந்த 2019-ம் ஆண்டு துபாயிலிருந்து சுற்றுலா விசாவில் தமிழ்நாட்டுக்கு வந்தார். அப்படி வந்தவர் கணவா் செந்தில்குமாருடன் டி.வி.புத்தூர் கிராமத்திலேயே தங்கிவிட்டாராம். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து புஷ்பலீலாவை கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...


x