மதுரையில் 100 வார்டுகளை ஒருங்கிணைக்கும் வாட்ஸ்ஆப்  குழுக்கள் - காவல் ஆணையர் புது முயற்சி


படம்: கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையராக ஜே.லோகநாதன் பொறுப்பேற்றது முதல் குற்றங்களை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் அவரது அலுவலகத்தில் புகார் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதுதவிர, மாதந்தோறும் ‘மெகா குறைதீர் முகாம்’களை நடத்தி பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்படுகின்றன. இதன்படி, 5வது ‘மெகா குறை தீர்க்கும் முகாம்’ மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் பெறப்பட்ட 180 மனுக்கள் குறித்து மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், துணை ஆணையர்கள் மக்களிடம் நேரில் விசாரித்தனர். மனுதாரர்கள் காவல் நிலையங்கள் வாரியாக இருக்கையில் அமரவைக்கப்பட்டு வரதட்சணை, குடும்பப் பிரச்சினை, கந்துவட்டி, பணம் கொடுக்கல்- வாங்கல் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் விசாரிக்கப்பட்டன.

இந்த முகாமில் முதன்முறையாக மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் பொதுமக்கள் - போலீஸார் நல்லுறவை மேம்படுத்தும் விதமாகவும், குற்றங்களை தடுக்கும் நோக்கிலும் வாட்ஸ் ஆப் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அண்ணா நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வாட்ஸ் ஆப் குழுவின் செயல்பாட்டை காவல் ஆணையர் லோகநாதன் தொடங்கி வைத்தார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் காவல் ஆணையர் லோகநாதன் கூறியதாவது: "இதுவரை நடந்த முகாம்கள் மூலம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. முதன்முறையாக மாநகர பகுதியில் 100 வார்டுகளிலும் வசிக்கும் மக்கள் - போலீஸார் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் வாட்ஸ் ஆப் குழுக்கள் உருவாக்கப்படுகிறது. அந்தந்த காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட காவல் ஆய்வாளர்கள் எஸ்ஐ-க்கள் இதன் அட்மினாக இருப்பார்கள்.

இக்குழுக்களில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர், விஏஓ-க்கள், ஆரம்ப சுகாதார நிலைய பொறுப்பாளர், சத்துணவு, போக்குவரத்து, மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பிற துறையினர், ஆட்டோ சங்கம், குடியிருப்போர் நலச்சங்கம், பெட்டிக்கடைக்காரர், ஓர்ஷாப் நடத்துவோர், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் ஏடிஎம் காவலாளிகள், தங்கும் விடுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களும் உறுப்பினர்களாக இணைக்கப்படுவர்.

அவரவர் பகுதியில் நடக்கும் குற்றச்சம்பவம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் குறித்த தகவல்களை உரிய ஆதாரங்களுடன் புகார் மனுவாக வாட்ஸ் அப்க் குழுவுக்கு அனுப்பலாம். இதன் மூலம் குற்றம் தடுக்கப்படுவதுடன் துரித நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும். இக்குழுவில் ஏதேனும் ரகசிய தகவலை அளிக்க விரும்பினால் அட்மினுக்கு தனியாக அனுப்பலாம். ஒவ்வொருவரின் தகவலும் ரகசியம் காக்கப்படும்.

தவறான தகவல், புகைப்படங்களை பகிரக்கூடாது. இக்குழுக்களை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப் படும். வாழ்த்துகள், அரசியல், சாதி, மதங்களுக்கு எதிரான பதிவு, மோதலைத் தூண்டும்விதமான தகவல்களை பகிரக்கூடாது" என்று காவல் ஆணையர் லோகநாதன் கூறினார்.

முகாமில் துணை ஆணையர்கள் மதுக்குமாரி, ராஜேஸ்வரி, வனிதா, கூடுதல் எஸ்பி-யான காட்வின் ஜெகதீஸ்குமார், நுண்ணறிவு உதவி ஆணையர் சந்திரசேகர் உள்ளிட்ட உதவி ஆணையர்கள், ஆய்வாளர் ஹேமா மாலா, காவல் ஆய்வாளர்கள், காவல் சட்ட ஆலோசகர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x