மின் கம்பத்தில் செம்புக் கம்பிகளை திருட முயன்ற இளைஞர் உயிரிழப்பு: ராமேசுவரம் அதிர்ச்சி


ராமேசுவரம்: பிரப்பன்வலசையில் மின் கம்பத்தில் உள்ள செம்புக் கம்பிகளை திருட முயன்ற போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார்.

ராமேசுவரம் - ராமநாதபுரம் தேசிய நெடுங்சாலையில் உள்ள பிரப்பன் வலசை கிராமத்தில் உயர் மின்னழுத்த வழித்தடம் உள்ளது. இன்று காலையில், இத்தடம் வழியே செல்லும் மின்சார கம்பத்தில் ஏறி செம்பு மின் கம்பியை இளைஞர் ஒருவர் திருட முயன்ற போது மின்சாரம் பாய்ந்து உடல் கருகி உயிரிழந்தார். தகலறிந்த மின்வாரிய பணியாளர்கள் உடல் கருகி பலியான வாலிபரின் உடலை மீட்டனர். பின்னர் அந்த இளைஞரின் உடல் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து உச்சிப் புளி போலீசார் விசாரணை நடத்தியதில், உடல் கருகி உயிழந்த இளைஞர் ராமநாதபுரம் மஞ்சன மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் (35) என தெரிய வந்துள்ளது. இவர் மீது ஏற்கெனவே, மின் கம்பி திருட்டு தொடர்பான வழக்கு ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

x